நடத்தையில் சந்தேகப்பட்டதால் ஆத்திரமடைந்து இரும்புக் கம்பியால் அடித்து கணவரை கொலை செய்ததாக  மனைவி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.  

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் டவுன் வி.நகர் 3-வது தெரு பாப்பாத்தி காடு பகுதியை சேர்ந்த நெசவு தொழிலாளி சரவணன் (48). இவருக்கு மல்லிகா (43) மற்றும் சரசு (40) என்ற 2 மனைவிகள் உள்ளனர். இவர்கள் இருவரும் அக்காள் தங்கை ஆவர். மல்லிகாவிற்கு ஸ்ரீதர் (25) என்ற மகனும், உமாமகேஸ்வரி(23) என்ற மகளும், சரசுவிற்கு கோபிநாத்(21) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். சரவணன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து 2-வது மனைவி சரசிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சம்பவத்தன்று மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்த சரவணன் சரசிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அன்று இரவு சரவணன் அவரது வீட்டின் மாடியில் தூங்குவதற்காக சென்றுவிட்டார். சரசு மாடிக்கு சென்றபோது அப்போதும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சரசு இரும்புக் கம்பியால் கணவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் தலையின் பின்புறத்தில் பலத்த காயம் அடைந்த சரவணன் இறந்தார். பிறகு அவரை துணி காயப்போடும் கம்பியில் சேலையால் கழுத்தை இறுக்கி கட்டி உள்ளார். 

இந்நிலையில் சரவணன் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி உள்ளார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சரவணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால்,  உடல் மட்டும் தலையில் பலத்த காயங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அவரது 2-வது மனைவி சுரசு மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், விசாரணையில் அவரது 2வது மனைவி சரசு அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், நடத்தையில் சந்தேகப்பட்டதாகவும், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு துன்புறுத்தியதாகவும் தெரிவித்தார். சம்பவத்தன்று அரவு சண்டை போட்டு தன்னை தாக்கிய கணவரை இரும்பு கம்பியால் தாக்கியபோது உயிரிழந்துவிட்டதாக சரசு தெரிவித்தார். இதனையடுத்து, அவரை கைது போலீசார் சிறையில் அடைத்தனர்.