சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற காவல் உதவி ஆய்வாளர் மதன்குமார் தற்காலிக பணி நீக்கம் செய்யப் பட்ட நிலையில், மதன்குமார் தரப்பில் அதற்கான விளக்கம் வெளியாகி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாம்பலம் சட்டம்- ஒழுங்கு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் மதன்குமார். பணியின் போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் மதன்குமார் சென்றதை யாரோ செல்போனில் படம் எடுத்து அதை காவல்துறையின் ’புகார் செயலி’க்கு அனுப்பி வைத்துள்ளனர். காவல்  உதவி ஆய்வாளர் மதன்குமார், ஹெல்மெட் அணியாமல் சென்ற புகைப்படங்களுடன் கூடிய புகார் அதில் இரண்டு முறை பதிவாகி இருந்ததால், தெற்கு காவல் இணை ஆணையர் மகேஸ்வரி, மதன்குமாரை தற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இந்நிலையில் உதவி ஆய்வாளர் மதன்குமார், அதற்கு விளக்கம் அளித்துள்ளார். "மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த தினேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவை அதிக வேகத்தில் ஓட்டிச் செல்வதைப் பார்த்ததும், நான் போய் அவரை மடக்கி, வேகத்தைக் குறைக்கும்படி அறிவுறுத்தினேன். அப்படி நான் அறிவுறுத்திய போது ஹெல்மெட்டை  கழற்றி விட்டு அவர் முகம் பார்த்து பேசிய தருணத்தில், நான் ஹெல்மெட் அணியாததை யாரோ படம் பிடித்து காவல் உயரதிகாரிகளுக்கு அனுப்பி விட்டனர்" என்று கூறியிருக்கிறார்.

ஆட்டோ ஓட்டுநர் தினேஷ்குமார், நடந்த சம்பவத்தை விளக்கமாகச் சொல்லி மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளரிடம் மன்னிப்புக் கோரி எழுதிக் கொடுத்த கடிதமும் வெளியாகி இருக்கிறது.