தமிழகத்தையே உலுக்கிய துணை நடிகை சந்தியா உடலை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த வழக்கில் கைதான அவரது கணவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் பூதப்பாண்டி ஞாலம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகை சந்தியா கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கில் சாக்குமூட்டையில் வெட்டப்பட்ட பெண்ணின் கை, கால்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சந்தியாவின் கணவர் பாலகிருஷ்ணனே, அவரை கொலை செய்து உடல் பாகங்களை குப்பை தொட்டியில் வீசியது தெரிய வந்தது. சந்தியாவின் உடல் பாகங்களான இடுப்பு பகுதி, கை, கால்கள் கிடைத்த நிலையில் தலையை போலீசார் தேடி வந்தனர். 

ஆனால் 2½ மாதங்களாகியும் சந்தியாவின் தலை மட்டும் கிடைக்கவில்லை. பின்னர், டி.என்.ஏ சோதனை மூலம் சிக்கிய பாகங்கள் அனைத்தும் சந்தியாவுடையது என்பதை போலீசார் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து சந்தியாவின் தலை கிடைக்காத உடலை அவரது உடலை பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். 

இதனையடுத்து, துணை நடிகை சந்தியாவை கொலை செய்த கணவர் பாலகிருஷ்ணனை சென்னை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர், குறிப்பிட்ட 90 நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. ஆகையால், சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணனை நீதிமன்றம், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். 

தற்போது தூத்துக்குடி, சென்னை, கேரளாவில் சுற்றிவருவதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பாலகிருஷ்ணன் ஜாமீனில் விடுதலையான செய்தியைக்கேட்டதும், சந்தியாவின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கொடூரமான முறையில், மனைவியை கொன்று, துண்டு துண்டாக வெட்டி வீசிய பாலகிருஷ்ணன் சுதந்திரமாக சுற்றிவருவது குறித்து, பள்ளிக்கரணை காவல் ஆய்வாளரிடம் விசாரித்தபோது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும், பின்னர், சம்மன் அனுப்பி பாலகிருஷண்னை நீதிமன்றத்திற்கு அழைப்போம் என்று விளக்கமளித்துள்ளார்.