வீரவநல்லூரிலிருந்து கொரோனா பாதுகாப்புப் பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற  ஊர்க்காவல் படை வீரர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த துயரச்செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 திருநெல்வேலி மாவட்டம். களக்காடு, கோவில்பத்து கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் சுப்பையா ரமேஷ். இவர் எலக்ட்ரிசியன் பணி புரிந்து வந்தார். ஊர்க்காவல் படையிலும் 7 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தவர். இவருக்குத் திருமணம் முடிந்து லதாசங்கரி என்ற மனைவி உண்டு. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை கொரோனா பாதுகாப்புப் பணிக்காக வீரவநல்லூர் சென்றிருந்தார். மதியம் 2 மணிக்குப் பணி முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் கொரோனா தொற்று இல்லாமல் இருப்பதற்காக சேரன்மகாதேவி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றிருக்கிறார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு  அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

இது குறித்துத் தகவலறிந்த சேரன்மகாதேவி காவல்துறையினர் சுப்பையா ரமேஷ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பு வைத்தனர்.