கன்னியாகுமரியில் சப் இன்ஸ்பெக்டர் வில்சனை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. 

குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த படந்தாலுமூடு சோதனை சாவடியில் நேற்றிரவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் மட்டும் பணியில் இருந்தார். இரவு 10 மணியளவில் குல்லா அணிந்த 2 வாலிபர்கள் ஒரு காரில் சோதனை சாவடிக்கு வந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனிடம் சென்று பேசினர். சிறிது நேரத்தில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரச்சனை முற்றியதும் வாலிபர்களில் ஒருவர் கைத்துப்பாக்கியை எடுத்து சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் வில்சன் மீது 3 குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். துப்பாக்கி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் வாலிபர்கள் இருவரும் காரில் ஏறி தப்பிச்சென்றனர். இதையடுத்து சோதனை சாவடியில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த வில்சனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் சுட்டுக்கொன்றது யார்? எதற்காக சுடப்பட்டார்? என்பது குறித்து தீவிர விசாரணை தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும் சோதனை சாவடி அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் கைப்பற்றினர். அந்த காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். இதனிடையே சப் இன்ஸ்பெக்டர் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.