பலாத்காரம் புகார் கொடுக்க வந்த பெண்ணை மிரட்டி காவல் ஆய்வாளர் ஒருவரே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதைபோல பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலரே இதுபோன்ற கீழ் தரமான செயலில் ஈடுபட்டுள்ளார். 

மகாராஷ்டிரா மாநிலம் பிவாண்டியில் உள்ள சாந்திநகர் காவல் நிலையத்தில் ரோஹன் கொன்ஜாரி என்பவர் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்திற்கு வந்து 2 பேர் மீது பாலியல் புகார் தெரிவித்தார். அந்த புகாரில், சதீஷ், சலீம் ஆகிய இருவர் என்னை பலாத்காரம் செய்தனர். இதற்கு சதீஷின் முன்னாள் காதலி உடந்தையாக இருந்தார். என்னை பலாத்காரம் செய்த காட்சியை அவர்கள் வீடியோவில் படம் பிடித்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டி என்னிடம் பணம் பறித்துக் கொண்டனர் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இந்த புகாரை சப் இன்ஸ்பெக்டர் ரோஹன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார். ஆனால் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் போலீஸ் அதிகாரியே புகார் அளித்த பெண்ணையே மிரட்டத் தொடங்கினார். நான் சொல்வதை கேட்கவிட்டால் பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ரோஹனுக்கு காவல் நிலையத்தில் இந்த பெண் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது; சதீஷ் நக்கல்வார் என்ற வாலிபரை நான் காதலித்து வந்தேன். இதற்கு அவரது முன்னாள் காதலி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சதீஷிடம் இருந்து விலகிவிடுமாறு அவர் என்னை எச்சரித்தார். ஆனால், சதீஷூடனான எனது உறவு தொடர்ந்தது. 

இதனால், ஆத்திரமடைந்த சதீஷின்  முன்னாள் காதலி தனது நண்பன் சலீம் என்பவனை தூண்டி விட்டு என்னை பலாத்காரம் செய்ய வைத்தார். பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என ஒரு இடத்துக்கு என்னை அழைத்த அவர்கள், மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர்பானத்தை குடித்தேன். அதன் பிறகு சலீம் என்னை பலாத்காரம் செய்தார். இதை அவர்கள் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். சதீஷின் திட்டப்படிதான் இதெல்லாம் நடந்தது என்பது எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. பாலியல் வீடியோவை காட்டி மிரட்டி என்னிடம் பணம் பறிக்கத் தொடங்கினர். 

இதுபற்றி நான் சாந்திநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். சப் இன்ஸ்பெக்டர் ரோஹன் எனது புகாரை பதிந்து கொண்டு பின்னர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதனையடுத்து அவரை உடனே கைது செய்ய உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். ஆனால் தற்போது அவர் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.