தேர்வின் போது விடைத்தாளை காட்டாத மாணவருக்கு கத்தி குத்து!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வின்போது பதில்கள் காட்டாததால் மாணவர் ஒருவரை சக மாணவர்கள் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டி நகரில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வின்போது, விடைத்தாள்களை காட்ட மறுத்ததால், சக மாணவரை மூன்று மாணவர்கள் கத்தியால் குத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கி, காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
“எஸ்எஸ்சி தேர்வின் போது, பாதிக்கப்பட்ட மாணவர், குற்றம் சாட்டப்பட்ட மாணவர்களுக்கு விடைத்தாளைக் காட்ட மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று மாணவர்கள், தேர்வுக் கூடத்தை விட்டு வெளியே வந்தவுடன் அவரைப் பிடித்து சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளனர். இதன் காரணமாக அந்த மாணவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.” என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சிகிச்சைக்கு பின்னர் அந்த மாணவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 324இன் (ஆபத்தான ஆயுதம் அல்லது வழிமுறைகளால் தானாக முன்வந்து காயப்படுத்துதல்) கீழ் குற்றம் சாட்டப்பட்ட சிறுவர்கள் மீது பிவாண்டியில் உள்ள சாந்தி நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.