Kovai Student Suicide |கோவை மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு போராட்டம். பாலியல் தொல்லையளித்த ஆசிரியர் சிக்கினார்.
யாரையும் சும்மா விடக்கூடாது என்று தற்கொலை செய்துகொண்ட மாணவி கைப்பட எழுதிய கடித்ததை வைத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
யாரையும் சும்மா விடக்கூடாது என்று தற்கொலை செய்துகொண்ட மாணவி கைப்பட எழுதிய கடித்ததை வைத்து போலீஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கோவையில் சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் அளித்த பாலியல் தொல்லையால் மனமுடைந்து 17 வயதாகும் 12-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்டது தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோட்டைமேடு பகுதியை சேர்ந்த மாணவியை, சின்மயா வித்யாலயா பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி, பள்ளியின் ஆடிட்டோரியத்தில் வைத்து மேலாடையை கழட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார் என்பது புகாராகும். ஆனால் பள்ளி நிர்வாகமோ மாணவியின் மேலாடை கழட்டப்பட்ட விவகாரத்தை கூட பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், ஏதோ பேருந்தில் தெரியாதவர் உரசியதை போல நினைத்துக்கொள்ளுமாறு கூறியுள்ளது.
இயற்பியல் ஆசிரியரின் தொல்லையால் பள்ளியை விட்டே மாணவி சென்ற பின்னரும், வாட்ஸாப்பில் மிதுன் சக்ரவர்த்தி தொடர்ச்சியாக மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பொறுத்து பொறுத்து பார்த்த மாணவி ஒரு கட்டத்தில் மனமுடைந்து வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உக்கடம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு போராட்டங்களும் வெடித்துள்ளது. இன்று காலையில், உக்கடம் பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் பெரியாரிய அமைப்பினர், மாதர் சங்கத்தினர், மாணவர் அமைப்பினர் உள்ளிட்டோர் சின்மயா வித்யாலயா பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும், இயற்பியல் ஆசிரியர், மற்றும் தலைமை ஆசிரியரை கைது செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி தலைமையாசிரியர் மற்றும் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரது புகைப்படங்களை செருப்பால் அடித்தும், காலில் போட்டு மிதித்தும் போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியரை கைது செய்யக்கோரி சின்மயா பள்ளியை முற்றுகையிட்டு இஸ்லாமிய அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி மீது அவரது பெற்றோர்கள், கேவை மேற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் மிதுன் சக்ரவர்த்தி மீது போலீஸார் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பள்ளி ஆசிரியர் மிதூன் சக்கரவர்த்தி மீது, தற்கொலைக்கு தூண்டுதல், ஒரு முறைக்கு மேல் பாலியல் தொல்லையளித்தல், கடுமையான பாலியல் வன்புணர்வு செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை கைது செய்யக்கோரி போராட்டங்கள் வெடித்ததால் தலைமறைவாக இருந்த அவரை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், தலைமறைவாக இருந்த பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலிசார் சுற்றிவளைத்து பிடித்து தனி இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர் உயிரிழக்க காரணமாக இருந்த சின்மயா பள்ளியின் தலைமை ஆசிரியரையும் கைது செய்ய வேண்டும், அந்த பள்ளியின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்துள்ளது.
இதனிடையே சின்மயா வித்யாலயா பள்ளியில் படித்த பெரும்பாலான மாணவிகளுக்கு இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனிப்படை அமைத்து அனைத்து மாணவிகளிடம் ரகசியமாக விசாரணை நடத்த வேண்டும். மிதுன் சக்ரவர்த்தியால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க வசதியை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.