சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ளது எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழக வளாகத்தில் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தின் ஏராளமான கல்வி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. உள்ளேயே மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளும் உள்ளன. விடுதியில் ஏராளமான மாணவிகள், மாணவர்கள் தங்கி கல்வி பயின்று வருகின்றனர். நேற்று பிற்பகலில் எம் பிளாக்கில் உள்ள ஹாஸ்டலில் 2ம் ஆண்டு மாணவி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞன் ஒருவன் மாணவிக்கு முன்பாக நின்று கொண்டு அறுவறுக்கத்தக்க வகையில் சுய இன்பம் செய்துள்ளான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக விடுதி ரிசப்சனுக்கு சென்று புகார் அளித்தார். உடனடியாக சி.சி.டிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது அந்த இளைஞன் மாணவி முன்பாக நின்று சுய இன்பம் செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த இளைஞன் யார் என்று விசாரித்த போது அவன் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரப் பணிகளில் ஈடுபடுபவன் என்று தெரியவந்தது.

அந்த இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரை எஸ்.ஆர்.எம் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியுடன் இணைந்து மேலும் சில மாணவிகளும் சென்று பல்கலைக்கழக நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் கல்லூரி விடுதியில் மாணவிகளான நீங்கள் சிகரெட் பிடிக்கிறீர்கள், சரக்கு அடிக்கிறீர்கள் என்று பதில் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அந்த இளைஞன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்க வலியுறுத்தி பல்கலைக்கழக விடுதிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏராளமான மாணவிகள் இரவு நேரத்தில் திரண்டு தங்களுக்கு நீதி வேண்டும் என்று போராடியதால் பல்கலைக்கழக வளாகம் பரபரப்பாக காட்சி அளித்தது.