சென்னை கோயம்பேடு அருகே இருக்கும் நெற்குன்றத்தைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன்(72). இவரது மகன் பாலாஜி. கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். பாலாஜி அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் இருப்பவர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று முன்தினம் இரவும் குடித்து விட்டு போதையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த தனது தந்தையுடன் பாலாஜி சண்டையிட்டுள்ளார். ஓய்வூதிய பணத்தை தனக்கு தரும்படி பாலாஜி கேட்டிருக்கிறார். ஆனால் கோபால கிருஷ்ணன் மறுத்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த பாலாஜி தந்தையை சரமாரியாக தாக்கி இருக்கிறார். நிலைகுலைந்து சரிந்து விழுந்த அவரை கொத்தனார் வேலைக்கு பயன்படும் கரண்டியால் தலையில் தாக்கியிருக்கிறார்.

இதில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு பதியப்பட்டு பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குடிபோதையில் தந்தையை அடித்து கொன்ற மகனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.