சென்னை, வண்டலுார், மண்ணிவாக்கம், தச்சன்காலனியைச் சேர்ந்தவர் பவானி. இவருடைய கணவர் அன்பு. இவர்களுக்கு இரு மகன்கள். அன்பு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கணவரின் மரணத்திற்குப் பின் பவானிக்கு சோமமங்கலம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது மகன் சம்பத்குமாருக்கு தெரியவந்ததும் தாயைக் கண்டித்துள்ளார். ஆகவே, பவானி தன் இரு மகன்களையும் விட்டு விட்டு ராஜ்குமாருடன் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

இதனால் சம்பத்குமாருக்கு தன் தாய் பவானி மீது வெறுப்பு இருந்துள்ளது. இந்நிலையில் இன்று பவானி தன் உறவினர்களைப் பார்க்க ராஜ்குமாருடன் மண்ணிவாக்கம் வந்துள்ளார். இதைப் பார்த்த சம்பத்குமார், பவானி இங்கு வரக்கூடாது எனச் சொல்லி தாயை தடுத்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரம் அடைந்த சம்பத்குமார், தன் கையில் இருந்த கம்பியால் பவானியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதை தடுக்க வந்த ராஜ்குமாரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளார். முதுகு, வயிற்றுப்பகுதிகளில் கம்பியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடைந்த பவானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ராஜ்குமார் மீட்கப்பட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். 

இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் சம்பத்குமாரை கைது செய்தனர். தாயை, மகனே படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.