தனது போட்டோவை பேஸ்புக்கில் ஆபாசமாக மார்ஃபிங் செய்தது வெளியிட்டதால்,  21 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார். சோகத்தில் அந்தப் பெண்ணின் முறைப்பையனும் தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு தூண்டியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ராதிகாவின் போட்டோவை ஆபாசமாக மார்ஃபிங் செய்து வெளியிட்ட பிரேம்குமார் பற்றிய சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெய்வேலி சம்பவத்தில் மாணவி ராதிகாவின் அத்தை மகன் விக்னேஷ்க்கும், பன்னீர்செல்வத்தின் மகன் பிரேம்குமார் இவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்து  அவ்வப்போது பிரேம்குமாரும், அவரது  தந்தை பன்னீர்செல்வமும் அந்த மாணவிக்கு பலமுறை  மனதளவில் தொந்தரவு கொடுத்தும், மிரட்டல் விடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் பிரேம்குமார்  முகநூலில் அந்த மாணவி பற்றி  அவதூறாக பதிவு செய்தும் ராதிகாவின் போட்டோவை ஆபாசமாக மார்ஃபிங் செய்தும் அசிங்க  திட்டியும் கமாண்ட்ஸ் போட்டு வந்துள்ளார். இவையெல்லாம் முதற்கட்ட தகவல்கள். போலீசார் விசாரித்து வருகின்றனர். முழுமையான புலனாய்வுக்கு பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்.

பிரேம் குமார் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அது, விசிக கட்சியின் தொழிற்சங்க பிரமுகரான பிரேம்குமாரின் தந்தை பன்னீர் மற்றும் உறவினர் வல்லரசு ஆகியோர். வடலூரில் ஒரு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரேம்குமார் மீது ஒரு வழக்கு ஏற்கனவே நிலுவையில் உள்ளது. அதாவது  கடந்த சில மாதங்களுக்கு முன்  இளம் வயது பெண்ணை கடத்தி கொண்டு போன குற்றவாளியான பிரேம்குமார் வீட்டை காட்டியதற்காக அந்த மாணவி ராதிகாவை அவதூறாக சித்தரித்து தற்கொலைக்கு தூண்டியதாகவும் தெரிகிறது. பிரேம்குமார் விசிக கட்சியின் பூத் ஏஜெண்ட்டாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவி, அவரது மாமன் விக்னேஷ் ஆகியோரின் குடும்பத்தினரை பாமக மாநில தலைவர் ஜிகே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.மணி, எந்தத் தவறும் செய்யாத அந்த மாணவி, விக்னேஷ் இருவர் தற்கொலை என்பது திட்டமிட்ட செய்யப்பட்ட கொலையாகும்.  கருவேப்பிலங்குறிச்சி திலகவதி, குறிஞ்சிப்பாடி அனிதா,  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெண்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்தும் வன்முறைக் கும்பலால் கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பதற்றம் நிறைந்த மாவட்டமாக உள்ளது. இதற்கு காரணமான நாடக காதல் கும்பல் நயவஞ்சகமாக பெண்களின் வாழ்க்கையை சீரழித்து வருகின்றனர்.  

பெண்களின் பாதுகாப்புக்கு நிரந்தரமான சூழ்நிலை இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் வன்முறைக் கும்பலின் அராஜகம் தான்.  2 உயிர் போன நிலையில் போலீஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.  அதற்கான காரணத்தைக் கேட்டால் போலீசார் தடியடி நடத்தி பயமுறுத்துகிறது.  இதுபோன்ற சம்பவங்களை பாமக வன்மையாக கண்டிக்கிறது. பெண்களை பள்ளி,  கல்லூரிகளுக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் பயப்படுவதும், பெண்கள் சம உரிமை,  பெண்கள் பாதுகாப்பு போன்றவை இல்லாமல் போவதற்கு இதுபோன்ற வன்முறை கும்பல் தான் காரணம்.  அவ் வன்முறைக் கும்பல் மேல் புகார் அளிக்கச் சென்றால் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பெண்களின் வாழ்க்கை பறிபோவது மட்டுமில்லாமல், ஜெயிலுக்கு போக வேண்டும் என்பது தான் தற்போது நாட்டின் நிலைமையாக உள்ளது.

இந்த இருவரின் சாவுக்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும், இளம் வயது பெண்ணை கடத்தி கொண்டு போன குற்றவாளியான பிரேம்குமார் வீட்டை காட்டியதற்காக அந்த மாணவியை அவதூறாக சித்தரித்து தற்கொலைக்கு தூண்டிய பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவ்வாறு சரியான நடவடிக்கை காவல்துறை எடுக்காவிட்டால் பாமக  சார்பில் கடலூர் மற்றும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என்றார்.