திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பழையூர் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னபாபு . இவர் அதே பகுதியை சேர்ந்தவர் நித்யகமலா என்ற பெண்ணை  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.  திருமணமான 5 ஆண்டுகளுக்கு பிறகு லத்திகாஸ்ரீ  என்ற பெண் குழந்டித பிறந்தது. 

இந்நிலையில்  நித்யகமலா, மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்தபோது திண்டுக்கல்லை அடுத்த சீலப்பாடி அருகே உள்ள அழகிரிகவுண்டனூரை சேர்ந்த உடற்கல்வி இயக்குனராக வேலை பார்த்த முத்துப்பாண்டி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

இந்த விஷயம் பிரசன்னபாபுவுக்கு தெரியவர குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால், நித்யகமலா கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கணவரை பிரிந்து லத்திகாஸ்ரீயுடன் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
முத்துப்பாண்டி, தனது குலதெய்வ கோவிலான திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ஸ்ரீராமசமுத்திரம் அங்காளம்மன் கோவிலுக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அந்தவகையில் கடந்த வாரம் கோவிலுக்கு வந்த முத்துப்பாண்டியுடன் நித்யகமலாவும் குழந்தையுடன் வந்திருந்தார்.

அவர்கள் கோவில் வளாகத்தில் உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து சில நாட்களாக தங்கி காட்டுப்புத்தூர் பகுதியில் வாடகைக்கு வீடு தேடி வந்துள்ளனர். கடந்த 16-ந் தேதி காட்டுப்புத்தூர் நேதாஜி தெருவில் ராஜசேகரன் என்பவருடைய வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் சிறுமி லத்திகாஸ்ரீ டி.வி.பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துப்பாண்டியும், நித்யகமலாவும் படிக்காமல் டி.வி. பார்த்துக் கொண்டு இருக்கிறாயா? என்று கேட்டு தென்னை மட்டையால் லத்திகாஸ்ரீயின் உடலில் பல இடங்களில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் உடல் முழுவதும் பலத்த காயத்துடன் துடித்த லத்திகாஸ்ரீயை காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இருவரும் தூக்கிச் சென்றனர். அப்போது அவர்கள், சரியாக படிக்காததால் குழந்தையை அடித்து விட்டோம் எனக்கூறி சிகிச்சை அளிக்க கேட்டுக் கொண்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லத்திகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதையடுத்து  நித்யகமலாவை போலீசார் பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது அவர், தனது குழந்தையை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையை தான் அடிக்கவில்லை, முத்துப்பாண்டிதான் அடித்தார் என நித்யகமலா கூறினார். அதற்கு முத்துப்பாண்டி தான் அடிக்கவில்லை நித்யகமலாதான் குழந்தையை அடித்தார் என ஒருவரையொருவர் மாறி, மாறி குற்றம் சாட்டினர். 

ஆனால் குழந்தை தங்களுக்கு இடைஞ்சலாக இருந்ததால் இருவ்ரும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்