சிவகாசி அருகே 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாமைச் சேர்ந்த இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கொங்கலாபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருக்கு பத்மா என்ற மனைவியும், சின்னமுத்து (11) என்கிற மகனும், பிரித்திகா (8) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். சுந்தரம் மற்றும் அவரது மனைவி பத்மா இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தனர். சிறுவன் சின்னமுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6–ம் வகுப்பும், சிறுமி பிரித்திகா 3–ம் வகுப்பும் படித்து வந்தனர். நேற்றுமுன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற இருவரும் பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பினர்.

பின்னர் சிறிது நேரத்தில் சிறுமி பிரித்திகா மட்டும் தனது வீட்டின் பின்புறம் உள்ள பொது கழிப்பிடத்துக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றவர். பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில், மறுநாள் காலையில் எல்லைப்பகுதியில் சிறுமி கீர்த்திகா, காட்டுப்பகுதியில் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். 

இது தொடர்பாக வழக்குப்பதி செய்த போலீசார் கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். வட மாநில வாலிபர்களுக்கு கொலையில் தொடர்பு இருக்கலாம் என கருதினர். அதன் பேரில் அந்த பகுதியில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில வாலிபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார். 

இந்நிலையில், 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜர் அலி என்ற வாலிபர்  அதிரடியாக கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.