சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளிகள் 2 பேர் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசி அண்ணா நகரை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் அர்ச்சுணன் (32), பள்ளப்பட்டி விவேகானந்தர் காலனியைச் சேர்ந்த சஞ்சீவி மகன் முருகன் (33). நண்பர்களான இவர்கள் இருவரும் சுமை தூக்கும் தொழிலாளிகள். தினமும் அதிகாலையிலேயே வீட்டில் இருந்து புறப்பட்டு வேலைக்கு சென்றுவிடுவார்கள். இன்று வழக்கம்போல் இருவரும் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறி வீட்டில் இருந்து கிளம்பினர். 

இந்நிலையில், இருவரும், இன்று அதிகாலை வெவ்வேறு பகுதியில் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதுதொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரட்டை கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

முதற்கட்ட விசாரணையில் ஒரே கும்பல்தான் திட்டமிட்டு 2 பேரையும் கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கொலைக்கான காரணம்? முன்விரோத மோதலா? அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிவகாசியில் ஒரே நேரத்தில் 2 பேர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.