சிவகங்கை நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் ரவுடி ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம் பனங்காடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன் (38). இவர் மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில், இன்று வழக்கு ஒன்றில் ஆஜராக காலை 11 மணிக்கு சிவகங்கை நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, ஆட்சியர் அலுவலகம் அருகே 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களால் அவரை வழிமறித்தது.

 

 

அவர்களிடம் தப்பிக்க இருசக்கர வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு உயிர் பயத்தில் தலைத்தெறிக்க ஓடினார். ஆனால், அந்த மர்ம கும்பல் அவரை விடாமல் ஓட ஓட விரட்டி வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராஜசேகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை செய்த மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். 

இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி இரவு, வயலில் மின் மோட்டார் அறையில் தூங்கிக் கொண்டிருந்த பனங்காடியைச் சேர்ந்த வெங்கடேசன், இளையராஜா ஆகியோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலைக்கு பழிவாங்கும் வகையில் ராஜசேகரன் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. பட்டப்பகலில் நீதிமன்றம் வளாகம் அருகே இந்த கொலை நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.