சிவகங்கை அருகே ராணுவ வீரரின் மனைவி, தாயை கொலை செய்த மர்மநபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே முடுக்குரணி என்ற கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஸ்டீபன். இவரது தாய், தந்தை, மனைவி, குழந்தை ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு ஸ்டீபனின் தந்தையும் முன்னாள் ராணுவ வீரர் சந்தியாகு என்பவருடன் சேர்ந்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு சென்ற நிலையில், சந்தியாகுவின் மனைவி ராஜகுமாரி வீட்டிற்கு வெளியிலும், ஸ்டீபனின் மனைவி சினேகாவும், அவர்களது 7 மாத குழந்தையும் வீட்டிற்குள்ளும் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, வந்த  மர்ம கும்பல் முதலில், வெளியே தூங்கிக் கொண்டிருந்த ராஜகுமாரியை தலைகாணியை வைத்து அமுக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்கள். பின்னர், ராஜகுமாரியை பெரிய இரும்பு ராடை கொண்டு மிகக் கொடூரமாக தாக்கியுள்ளார்கள். இதனையடுத்து வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த சினேகாவையும் குழந்தையின் கண் முன்னே இரும்பு ராடை கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில், ராஜகுமாரியும், சினேகாவும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், அதிகாலையில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர், 2 பேரும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், 65 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றிருப்பதும் தெரியவந்தது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.