தேமுதிக பிரமுகரின் செல்போன் கடையை உடைத்து, ரூ.6 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த செல்போன்கள், ரூ.1.35 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் அருள் பாக்கியராஜ். தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினர். இதே பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இங்கு 3-க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர்.

நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும், அனைவரும் கடையை பூட்டி கொண்டு வீட்டுக்கு சென்றனர். இன்று காலை அருள் பாக்கியராஜ் கடையை திறக்க சென்றார். அப்போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. ஷோ கேசில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.6 லட்சம் மதிப்பு புதிய விலை உயர்ந்த செல்போன்கள், கல்லா பெட்டியில் இருந்த ரூ.1.35 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.

தகவலறிந்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்கின்றனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.