விவசாயி ஒருவரை,  பாபநாசம் திரைப்படப் பாணியில் ஒரு குடும்பமே சேர்ந்து கொன்று புதைத்த திடுக்கிடவைக்கும் தகவல் 7 வருஷத்திற்கு பிறகு சிபிசிஐடி விசாரணையில் வெளியாகியுள்ளது.  

நெல்லை மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய சிவகிரி தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த மன்னார் கடந்த 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி தனது உறவினரான கந்தன் என்பவரின் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சச் சென்ற போது மாயமானார். கணவரை காணாமல் துடித்த மேரி சிவகிரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தியும் துப்பு துலங்காததால் வழக்கு கிடப்பில் போடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆண்டுகள் உருண்டோடிய நிலையில், தனது கணவரைக் கண்டுபிடித்து தரக் கோரி மதுரை கோர்ட்டில், கடந்த ஆண்டில் மேரி ஆட்கொணர்வு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், மன்னார் மாயமான வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டதை அடுத்து சிபிசிஐடி துணைக் கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர் பின்னர். வழக்கை தூசி தட்டிய சி.பி.சி.ஐ.டி ஆபீஸர்ஸ், 2012 ஆம் ஆண்டில் மன்னார் தண்ணீர் பாய்ச்ச சென்றது தொடங்கி விசாரணை நடத்தினர்.

மன்னாரைக் கடைசியாக பார்த்த இடம் குறித்து சிலர் சொன்ன தகவலை அடுத்து அந்த இடத்தில் உள்ளவர்களிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை நடத்தினர். அந்த விசாரணை வளையத்திற்குள் வந்தவர்கள் தான் பன்னீர்செல்வம் என்பவர் குடும்பத்தார் சிக்கினார்.

7 ஆண்டுகளுக்கு முன் கந்தன் என்பவரின் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சி விட்டு வீடு திரும்பிய மன்னார், பன்னீர்செல்வத்தின் தோட்டத்தின் வழியே சென்றுள்ளார். அப்போது, காட்டு பன்றியிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவதற்காக தனது நிலத்தில் பன்னீர்செல்வம் அனுமதியின்றி அமைத்திருந்த மின்வேலியில் மன்னார் கால் வைத்ததால், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார் என்ற திடுக்கிடும் தகவல் விசாரணையில் வெளியானது.

அடுத்த நாள் காலையில் தனது வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பன்னீர் செல்வம், அவரது மனைவி, மருமகன் பாலகுரு ஆகியோர் மன்னாரின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்ததாகக் சொல்லப்படுகிறது. போலீசுக்கு தகவல் சொன்னால், சட்டவிரோத மின் வேலி அமைத்தது தொடர்பாக வழக்கை சந்திக்க நேரிடும் என்று பயந்த பன்னீர்செல்வம் தனது குடும்பத்தாரின் உதவியுடன் யாருக்கும் தெரியாமல் மன்னாரின் உடலை அவர்களது தோட்டத்தில் புதைத்தது விசாரணையில் அம்பலமானது.

மேலும், பன்னீர்செல்வம் உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு உயிரிழந்து விட்டதால், பாலகுருவையும், அவரது மாமியார் சிபிசிஐடி அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் மீது மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துதல், சதி திட்டம் தீட்டி தடயங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்ட இருவரையும் காவலில் எடுத்த பிறகு, அவர்களை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று மன்னாரின் உடலை தோண்டி எடுக்க சிபிசிஐடி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு, உயிரிழப்புக்கான காரணம் உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் பட பாணியில் ஒரு குடும்பமே சேர்ந்து கொன்றது அம்பலமானது.