விழுப்புரம் அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை, அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து, தர்மஅடி கொடுத்தனர். மேலும், சுமார் 3 கி.மீ. தூரத்துக்கு அடித்து இழுத்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம் அருகே  தோகைபாடி கிராமத்தில்  சிறுவர்கள், தெருவில் விளையாடி கொண்டிருந்தனர்.  அப்போது அங்கு சென்ற ஒரு வாலிபர், தெருவில் விளையாடி கொண்டிருந்த 3 வயது சிறுமியை அழைத்துள்ளார். பின்னர், சிறுமியிடம் பேச்சு கொடுத்தவர், சாக்லெட் வாங்கி தருவதாக கூறி, கடைக்கு அழைத்து சென்றார். 

பின்னர், யாரும் இல்லாத பகுதிக்கு குழந்தையை தூக்கி சென்ற வாலிபர், அங்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கிடையில், தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுமியை காணாமல் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். பல இடங்களில் தேடியும், சிறுமி குறித்த எந்த தகவலும் இல்லை. சிறிது நேரம் கழித்து சிறுமி அழுது கொண்டே வீட்டுக்கு சென்றார். சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, வாலிபர் தன்னை அழைத்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததை அழுது கொண்டே கூறினாள். இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் பொதுமக்கள், சிறுமி கூறிய இடத்துக்கு சென்றனர்.

 

அப்போது, அங்கிருந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர், அவரை நடுரோட்டில் வைத்து அடித்து உதைத்து, சுமார் 3 கி.மீ. தூரம் உள்ள காணை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, வாலிபரை கைது செய்தனர்.