சென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் போச்சோ சட்டத்தில் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

சென்னை ஐசிஎப் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ராஜா (55). இவர் சொந்தமாக ஆம்னி வேன் வைத்துள்ளார். அந்த வாகனத்தை சிறுவர், சிறுமியரை பள்ளிகளுக்கு அழைத்து செல்லும் பள்ளி வாகனமாக பயன்படுத்தி வந்தார். பல ஆண்டுகளாக பள்ளி வாகனம் இயக்கி வருவதால், அயனாவரம், ஐசிஎப், அண்ணாநகர் சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை இவரது வாகனத்தில் பள்ளிக்கு அனுப்பி வந்தனர். 

இந்நிலையில், இவரது வாகனத்தில் பள்ளிக்கு சென்று வந்த 5 வயது சிறுமிக்கு வேன் ஓட்டுநர் ராஜா தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே, கடந்த வாரம் இந்த சிறுமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றனர். அப்போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவர் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளார்.

 

உடனே இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பள்ளி வேன் டிரைவர் ராஜா தினசரி, பள்ளி முடிந்து  சிறுமியை வீட்டில் இறக்கிவிடும் போது அடிக்கடி  பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் போலீசார் போச்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.