திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு வைத்துக் கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என ஒடிசா மாநில உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டத்தை சேர்ந்த அச்யுத் குமாரும், அதே பகுதியை சேர்ந்த 19 வயதான பழங்குடியின இளம்பெண்ணும் கடந்த 4 ஆண்டுகளாக காதல் கொண்டு நெருங்கி பழகி வந்துள்ளனர். இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்தப் பெண் இரு முறை கர்ப்பம் தரித்துள்ளார்.

 

இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பரில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து அச்யுத் குமார், பாலியல் உறவு வைத்துக்கொண்டதாகவும், இரண்டு முறை மாத்திரைகள் கொடுத்து கருவைக் கலைத்ததாகவும் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இதன் பெயரில், அச்யுத் குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

கீழ் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தள்ளுபடி ஆன நிலையில்,அச்யுத் குமார் ஒடிசா உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.கே.பனிகிரஹி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அச்யுத் குமாருக்கு ஜாமீன் வழங்கியதுடன் அரசு தரப்புக்கு ஒத்துழைக்க வேண்டும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை மிரட்டக்கூடாது என்று நிபந்தனைகள் விதித்தார்.

இந்த வழக்கு குறித்து நீதிபதி கருத்து கூறும்போது,  ’திருமணம் செய்துகொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும், ஆண் - பெண் இருவரும் தங்கள் விருப்பத்தின்பேரில், பாலியல் உறவு வைத்துக்கொள்வது இந்திய தண்டனை சட்டப்படி பாலியல் வன்கொடுமை குற்றம் ஆகாது.

பெண்கள், விருப்பத்தின்பேரில் பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் விவகாரங்களில் பாலியல் வன்கொடுமை வழக்கை பயன்படுத்துவது சரிதானா? என்று விரிவான ஆய்வு நடத்த வேண்டும். இருப்பினும், சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட, ஏழை பெண்களை திருமணம் செய்து கொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து ஆண்களால் பாலியல் உறவு கொள்ளப்பட்டால், அதற்கு தீர்வு காண பாலியல் வன்கொடுமை சட்டங்கள் தவறி விடுகின்றன’’என்று அவர் தெரிவித்தார்.