என்னோட ஆசைக்கு இணைங்கினால் மட்டுமே உனக்கு அது கிடைக்கும்.. அமமுக பிரமுகர் மீது குவியும் பாலியல் புகார்..
கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தனது கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவரது விருப்பத்திற்கு இணங்காத மாணவிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
திண்டுக்கல் அருகே கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் அக்கல்வி நிறுவனத்தின் தாளாளரும், அமமுக பிரமுகரான ஜோதி முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே பழநி சாலையில் உள்ள முத்தனம்பட்டியில் சுரபி நர்சிங் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இதில், சில மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியின் தாளாளர் ஜோதி முருகன். அமமுக கட்சியின் அம்மா பேரவை மாநில இணைத்தலைவராக உள்ளார். மேலும், வேட்டை நாய்கள், காதல் 16 என 2 திரைப்படங்களை தயாரித்துள்ளார். 10க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.
இந்நிலையில், கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தனது கல்லூரியில் பயின்று வரும் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். அவரது விருப்பத்திற்கு இணங்காத மாணவிகளை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, 17 வயதான முதலாமாண்டு மாணவி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறி கல்லூரி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், கல்லூரி தாளாளருக்கு எதிராக மாணவ, மாணவிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநிவாசன் மற்றும் வருவாய் துறையினர் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனாவை கைது செய்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்றனர். இதனைத்தொடர்ந்து மாணவி அளித்த புகாரின்பேரில், தாடிக்கொம்பு போலீசார், தவறுக்கு உடந்தை, கொலை மிரட்டல் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ் தாளாளர் ஜோதிமுருகன் மற்றும் விடுதி காப்பாளர் அர்ச்சனா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் கைதான அர்ச்சனாவை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ஜோதிமுருகனை தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், நர்சிங் கல்லூரி விடுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்றுள்ளனர். இவர்களுக்கு கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் தொடர்ந்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும் நள்ளிரவில் கல்லூரிக்கு வரும் ஜோதிமுருகன், மாணவிகளை தனது காரில் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள ஆண்கள் கல்லூரி விடுதிக்கு கூட்டி சென்றுள்ளார். அங்கு தொடர்ந்து பாலியல் சீண்டல்கள் கொடுத்ததாகவும், இதற்கு கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா உதவியாக இருந்ததாகவும், மேலும் பல மாணவிகள் புகார் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் வகுப்பறைகள், கல்லூரிக்கு சீல் வைக்கப்பட்டது. மாணவிகள் அவரவர் வீட்டுக்கு பேருந்துகளில் அனுப்பி வைக்கப்பட்டனர்.