அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் பானு(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 17 வயது சிறுமியான இவர் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் தங்கி அங்கு உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் வேலைப்பார்க்கும் அதே கம்பெனியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் மண்டன்(27) என்பவரும் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கும் ரஞ்சித்திற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில் நண்பர்களாக பழகிய இவர்கள் நாளடைவில் காதலிக்க தொடங்கியிருக்கின்றனர். இதையடுத்து அனுப்பர்பாளையத்தில் வாடகைக்கு வீடு எடுத்து சிறுமியுடன் ரஞ்சித் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார். இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் தரித்தார். அதன்பிறகு ரஞ்சித் மண்டன் சிறுமியை தனியே தவிக்க விட்டு விட்டு தலைமறைவாகிவிட அதிர்ச்சியடைந்த சிறுமி அவரை பல இடங்களிலும் தேடியுள்ளார். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு கடந்த 30ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. சிறுமிக்கு 17 வயதே ஆகுவதால் இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் திருப்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிக்கு ரஞ்சித் வண்டல் குறித்த முழு விவரங்களும் தெரியவில்லை. இதனால் அவரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ரஞ்சித் மண்டன் கைதாகும் பட்சத்தில் போக்சோ சட்டத்தில் சிறையில் அடைக்கப்படுவார்.