ரகசியமாக காதல் திருமணம் செய்த கணவரை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் மலக்கப்பள்ளியை சேர்ந்தவர் பாவனி (21) இவரும் தாலப்புடியை சேர்ந்த தாத்தாஜி(25) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்துள்ளனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அவரவர் வீட்டிற்கு சென்றனர். இந்நிலையில், பாவனி தன்னை உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்ய வேண்டும் என்று தாத்தாஜியிடம் கேட்டுள்ளார். 

இதனை தாத்தாஜி ஏற்க மறுத்துள்ளார். பலமுறை வற்புறுத்தியும் ஏற்கவில்லை. இதனால், பவானிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் சந்தித்த இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்றுள்ளனர். பின்னர், மாலை வீட்டுக்கு சென்றபோது பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பாவனி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாத்தாஜியின் முதுகில் குத்தினார். இதில், அவர் நிலைதடுமாறி சரிந்து கீழே விழுந்தார். 

பின்னர், அவரின் முகம், மார்பு, தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர், தாத்தாஜியின் பெற்றோருக்கு போன் செய்த பவானி நான் உங்கள் மகளை கொலை செய்து விட்டேன் என்று தெரிவித்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் விரைந்து வந்து மகனின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர். பின்னர், கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தாத்தாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசை ஆசையாக காதல் திருமணம் செய்த பெண், திடீரென காதல் கணவனை கொடூரமாக கொன்றிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.