இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் ஷிமோகா நகரில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அந்தப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹிஜாப் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடகாவில் இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அங்கு அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் ஷிமோகா நகரில்144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் ஷிமோகா நகர் சி.கே.கட்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷா (24). இவர் பஜ்ரங்தள் என்ற இந்து அமைப்பு பிரமுகர் ஆவார். இந்நிலையில், நேற்று இரவு ஹர்ஷா பாரதி காலனி ரவிவர்மா வீதி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை 4 பேர் கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ஹர்ஷா அவர்களிடம் தப்பிக்க வண்டியை அங்கேயே போட்டுவிட்டு தப்பிக்க முயன்றார். ஆனால், அந்த கொலைவெறி கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதனையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பித்து சென்றது. இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹர்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் இந்து அமைப்பு பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் காட்டுத்தீ போல பரவியது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியதை அடுத்து தடியடி நடத்தி பொதுமக்களை விரட்டி அடித்தனர்.

இந்து அமைப்பு பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் ஷிமோகா நகரில் பதற்றமான சூழல் நிலவியது. இதனால் அந்தப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹிஜாப் விவகாரத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்கவும் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
