பிஞ்சுக் குழந்தைகளை குளத்தில் மூழ்கடித்துக் கொன்று, சடலங்களுடன் அசந்து தூங்கிய தாய்!
குளத்தில் மூழ்கியபோது தான் மட்டும் உயிர் பிழைத்து, குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டனர் என்றும் அஜ்மீரா சொல்லியிருக்கிறார்.
அசாம் மாதிலப் கச்சார் பகுதியில் கச்சுதரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஹதிகல் என்ற கிராமத்தில் பெண் ஒருவர் தனது இரண்டு மகள்களை குளத்தில் மூழ்கடித்து கொன்றுள்ளார்.
வெள்ளிக்கிழமை அசாம் மாநில போலீசார் அளித்துள்ள தகவலின்படி, அஜ்மிரா பேகம் லஸ்கர் என்ற பெண் தனது 3 வயது மகள் ரஜினா பேகம் லஸ்கர் மற்றும் ஒன்றரை வயதான பெண் குழந்தை பாத்திமா பேகம் லஸ்கர் இருவரையும் கொன்றதாகத் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று, வீட்டில் யாருக்கும் தெரியாமல் குழந்தைகளை குளத்தில் மூழ்க வைத்துக் கொன்றுவிட்டு உடல்களுடன் வீடு திரும்பியுள்ளார் அஜ்மிரா. வீட்டுக்கு வந்ததும் குழந்தைகளை படுக்கையில் படுக்க வைத்து போர்வையால் மூடிவிட்டு, பக்கத்திலேயே தானும் படுத்துத் தூங்கியிருக்கிறார்.
பின், உறங்கிக்கொண்டிருத்த அஜ்மீராவை குடும்ப உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். ஆனால், அஜ்மிரா அவர்களுக்குப் பதிலளிக்காமல் அசத்து தூங்கிக்கொண்டே இருந்திருக்கிறார். நீண்ட நேரமாகியும் பதில் வராததால், குடும்பத்தினர் போர்வையை விலக்கிப் பார்த்துள்ளனர். குழந்தைகளின் ஈரமான ஆடைகளைக் கவனித்த உறவினர்கள் குழந்தைகள் இறந்துவிட்டதையும் உணர்ந்துகொண்டனர்.
அதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், அஜ்மீராவை கைது செய்துள்ளனர். குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சில்சார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
விஷயம் தெரிய வந்த பிறகு, கிராமத்தினரிடம் பேசிய அஜ்மிரா, காலையில் கணவர் தன்னைத் திட்டியதாகவும், வீட்டை விட்டுத் தூக்கி வெளியே தள்ளிவிடுவேன் என்று மிரட்டியதாகவும், அதனால் தான் தானும் தற்கொலை செய்துகொண்டு குழந்தைகளையும் கொல்ல நினைத்தாகவும் கூறினார் என பக்கத்து வீட்டில் வசிக்கும் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தெரிவிக்கிறார்.
ஆனால், குளத்தில் மூழ்கியபோது தான் மட்டும் உயிர் பிழைத்து, குழந்தைகள் இருவரும் இறந்துவிட்டனர் என்றும் அஜ்மீரா சொல்லியிருக்கிறார். போலீசாரின் விசாரணையின்போது, அஜ்மிராவின் கணவர், தனது மனைவியைத் திட்டவில்லை எனவும் குடும்ப பிரச்சினைகளும் எதுவும் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த விவகாரம் குறித்த ஆரம்ப கட்ட விசாரணையில், குடும்பப் பிரச்சனைகள் காரணமாகவே அந்தப் பெண் சொந்தக் குழந்தைகளையே கொல்ல முடிவு எடுத்ததாகத் தெரிகிறது என காச்சார் கூடுதல் எஸ்பி சுப்ரதா சென் தெரிவிக்கிறார்.
(எந்த பிரச்சினைக்கும் தற்கொலை ஒரு தீர்வு அல்ல. தற்கொலை எண்ணம் எழுந்தால் அதைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் ஆலோசகர்களைத் தொடர்புகொண்டு பேசலாம்.)