நிச்சயிக்கப்பட்ட பெண்ணால் சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி ஆசிரியர் ஜாமீனில் வெளியே வந்து செய்த வேலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் துண்டகட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இவர் மன்னார்குடி அருகே கூன மடை கிராமத்தை சேர்ந்த ஹேமா என்ற இளம் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இரண்டு பேரின் பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டது. இதன்பின்னர் இருவரும் போனில் பேசிப்பேசியே காதலித்து வந்துள்ளனர். பாவம் யார் கண்ணு பட்டதோ இருவருக்கும் இடையே திடீரென கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால் சதீஷ்குமார் தன்னை ஏமாற்றி விட்டு திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார் என்று இளம்பெண் ஹேமா, மன்னார்குடி மகளிர் போலீசில் புகார் செய்தார். 

இதனால் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் 28-ந் தேதி சதீஷ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் நேற்று முன்தினம் நிபந்தனை ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த சதீஷ்குமார்,மன்னார்குடி அருகே வேட்டைத்திடல் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

இதற்கிடையே தான் உயிருக்கு உயிராக காதலித்த பெண்ணால் இப்படி சிறைக்கு சென்றதால் அவர் மிகவும் வேதனையுடன் காணப்பட்ட அவர், நேற்று மன்னார்குடி மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று கையெழுத்து போட்டு விட்டு மீண்டும் தனது சொந்தக்காரர் வீட்டுக்கு வந்த சதீஷ்குமார் அவமானத்தால் விரக்தி அடைந்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.