திருவனந்தபுரத்தில் பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய 9-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று பலாத்காரம் செய்த 4 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே கடினம்குளம் பகுதியில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை இந்த பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவி ஒருவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த கும்பல் மாணவியை கடத்தி சென்றது. இதற்கிடையே பள்ளிக்கு சென்ற மாணவி நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வராததால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, பல இடங்களில் தேடியும் பள்ளி மாணவி கிடைக்காததால் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனாலும், மாயமான மாணவி பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. 

இந்நிலையில் மறுநாள் காலை அந்த மாணவி தனது வீட்டிற்கு அழுதபடி வந்தார். இதனால் பதறிப்போன பெற்றோர் அவரிடம் விசாரித்த போது ஒரு கும்பல் அவரை காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விசாரணையில், மாணவியை கடத்தி சென்றது 4 பேர் கும்பல் என்றும், அவர்கள் கோவளம் வர்க்கலாவில் உள்ள ஓட்டலில் அடைத்து வைத்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

மாணவி கூறிய அடையாளத்தின் படி பழைய குற்றவாளி சோஜன் ( 23) என்பவர் மாணவியை கடத்திய கும்பலில் ஒருவர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். கழக்கூட்டம் பகுதியில் சுற்றித்திரிந்த சோஜனை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவரும் அபிலாஷ் (25), ரோமி (23), நிரஞ்சன் (25) ஆகியோரும் சேர்ந்து அந்த மாணவியை காரில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்து திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.