திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி ராம்நகரில் வசித்துவரும் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் ஆவடியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். கடந்த 30ம் தேதி உறவினர் வீட்டுக்கு சென்ற மாணவி வீட்டுக்கு வரவில்லை என்றதும் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

உடனே இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில்,  மாணவியை ஆவடி காமராஜர் நகர் ஜூவானந்தம் தெருவை சேர்ந்த விக்ரம்(21) என்பவர் கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் விக்ரம் மற்றும் மாணவியை தேடி வந்தனர். 

இந்நிலையில், தாம்பரம் பகுதியில் பதுங்கியிருந்த விக்ரமை போலீசார் பிடித்தனர். அவரிடம் இருந்து மாணவியை மீட்டனர். இவர்களை ஆவடி காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். திருமண ஆசைக்காட்டி மாணவியை கடத்திச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. இதனால், மாணவியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விக்ரமை போக்சோவில் கைது செய்துள்ளனர்.