ஆசை வார்த்தை கூறி 2 பள்ளி மாணவிகளை லாட்ஜில் வைத்து ஆட்டோ ஓட்டுநர்கள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி மற்றும் 15 வயது சிறுமி ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன் பள்ளிக்கு சென்ற மாணவிகள் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, பதறிப்போன பெற்றோர்கள் உறவினர் வீடுகளிலும், தோழிகளிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுபற்றி பள்ளியில் விசாரித்தபோது இருவரும் பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

உடனே இதுதொடர்பாக மாணவிகளின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில், காரப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் கனகராஜ் (21), குமார் (19) ஆகிய இருவரும் 2 மாணவிகளிடமும் ஆசை வார்த்தை கூறி, திருப்பூருக்கு சுற்றுலா அழைத்து சென்றதும், அங்குள்ள லாட்ஜில் அடைத்து வைத்து இரவு, பகல் பாராமல் பலாத்காரம் செய்ததும் தெரிந்தது. 

இதையடுத்து, திருப்பூருக்கு விரைந்த போலீசார் ஆட்டோ டிரைவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர், ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவிகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.