கொடைக்கானல் அருகே தனியார் பள்ளி மாணவர்களுக்குள் இடையிலான மோதலில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொடைக்கானலில் பசுமை பள்ளத்தாக்கு அருகே இயங்கி வருகிறது பாரதிய வித்யா பவன் பள்ளி. நேற்று இரவு 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான ஸ்ரீஹரி மற்றும் கபில் ராகவேந்திரா ஆகிய இருவருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டுள்ளது. மோதலில் விருதுநகரை சேர்ந்த ஸ்ரீஹரி என்ற மாணவன் ஒசூரைச் சேர்ந்த ராகவேந்திரா கத்திரிக்கோலால் குத்தியுள்ளார். இதில், பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் கபில் ராகவேந்திரா சரிந்தார். 

இதனையடுத்து, கபில் ராகவேந்திராவை மீட்ட பள்ளி ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஸ்ரீஹரியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் ஸ்ரீஹரி மற்றும் கபில் ராகவேந்திரா இருவரும் கடந்த ஆண்டு 9-ம் வகுப்பில் பாரதிய வித்யா பவன் பள்ளியில் சேர்ந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பலமுறை தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 

அதனால், கபில் ராகவேந்திராவை 12-ம் வகுப்பு மாணவர்கள் தங்கும் விடுதியில் பள்ளி நிர்வாகத்தினர் தங்க வைத்துள்ளனர். வழக்கம்போல நேற்று வருகை பதிவு எடுத்த போது ஸ்ரீஹரி மற்றும் கபில் ராகவேந்திரா இல்லாதது தெரியவந்தது. இதனையடுத்து. அவர்கள் இருவரையும் விடுதி ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேடியுள்ளனர். 

அப்போது, பள்ளி சீருடையில் ஒரு மாணவர் வெளியில் சுற்றுக்கொண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதனையடுத்து, ஸ்ரீஹரியை பிடித்து ஆசிரியர்கள் விசாரித்த போது கபில் ராகவேந்திராவுடன் ஏற்பட்ட சண்டையில் அவரை அடித்து கழிவறையில் போட்டு வைத்திருப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து, கழிவறையில் இருந்த கபில் ராகவேந்திராவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர், மாணவர் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்ரீஹிரியில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.