சென்னையில் இருசக்கர வாகனத்துக்கு வழிவிடாததால் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவரை குத்திக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாஜக பிரமுகர் மகன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை குரோம்பேட்டை நாகல்கேணியை சேர்ந்த பள்ளி மாணவர் விக்னேஷ் தனது நண்பருடன் கடந்த வெள்ளியன்று இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர்கள் அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவில் சென்று கொண்டு இருந்தபோது இருசக்கர வாகனத்திற்கு வழிவிடுவது தொடர்பாக அவர்களுக்கும் பம்மல் நகர பாஜக பிரமுகர் மதன் மற்றும் அவரது மகன் நித்தியானந்தம் ஆகியோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் செய்து விக்னேசும், நந்தாவும் அங்கிருந்து சென்று விட்டனர். 

சூனாலும் ஆத்திரத்தில் இருந்த மதனும், அவரது மகன் நித்தியானந்தாவும் கத்தியுடன் அங்கேயே காத்திருந்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் விக்னேசும், நந்தாவும் மீண்டும் அதே வழியில் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு மதனும், நித்தியானந்தமும் சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து இருவரும் படுகாயமடைந்தனர்.  

இதனையடுத்து இருவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், விக்னேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மதன் மற்றும் நித்தயானந்தம் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.