பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்களின் சீருடைகள் உருவப்பட்டு, நிர்வாணமாக வெயிலில் நிற்க வைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடுமையான சட்டதிட்டங்களை கொண்டு வந்த போதும் பள்ளிகளில் மாணவ- மாணவிகளுக்கு ஆசிரியர்கள் வழங்கும் கொடுமையான தண்டனைகள் குறைந்தபாடில்லை. அந்த வகையில் மீண்டும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறி அதிர வைத்திருக்கிறது. 

ஆந்திர மாநிலம், சித்தூர் அருகே உள்ள புங்கனூர் பகுதியில், சைதன்யா பாரதி என்கிற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் படித்து வரும் மாணவர்களில் 4 பேர் இன்று காலை, தாமதமாக வந்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர், 4 மாணவர்களையும்  ஈவு இரக்கமின்றி, ஆடைகளை நீக்கிவிட்டு பள்ளி மைதானத்தில் நிர்வாணமாக நிற்க வைத்துள்ளார். ஆடைகள் ஏதும் இன்றி, மொட்டை வெயிலில் மாணவர்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்து அவ்வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதை புகைப்படம் எடுத்து போலீசாருக்கு தகவல் அனுப்பினர். 

 

அத்துடன் இந்த விவகாரம் சித்தூர் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் புகாராக அனுப்பப்பட்டது. இதனையடுத்து, மாணவர்களை சித்ரவதை செய்த பள்ளியின் உரிமையை ரத்து செய்துவிட்டதாக மாவட்ட கல்வி அதிகாரி அறிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மீதும், இந்த செயலுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.