சேலம் மாவட்டம் சின்ன சோரகை கிராமத்தை சேர்ந்த மாணவி  நாகலட்சுமி அருகில் உள்ள நங்கவள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 15-ம் தேதி மாணவிக்கு பிறந்தநாள் என்பதால் அவர் பீர் பாட்டில்களை வகுப்பறைக்கு எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆசிரியர் வர மாணவிகள் கையில் மதுபான இருந்ததை பார்த்து கண்டித்தார்.

மேலும் தலைமை ஆசிரியரிடம் இது குறித்து புகார் அளித்தார். தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியரும் சேர்ந்து  நாகலட்சுமி உள்ளிட்ட 5 மாணவிகளையும் கடுமையாகத் திட்டி தீவிர விசாரித்ததில் ஒரு மாணவியின் பிறந்த நாளை கொண்டாட மதுபானம் வாங்கி வந்ததாக ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு எச்சரித்து அனுப்பப்பட்டனர்.

இதையடுத்து நாகலட்சுமியின் வீட்டிலும் அந்த மாணவியை பெற்றோர் திட்டி உள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி நேற்று தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால்அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வெளியில் தெரிந்தால் பிரச்சனை பெரியதாகும் என கருதி மாணவியின் சடலத்தை இரவோடு இரவாக எரித்துவிட்டனர்.

இது குறித்து தகவ்ல அறிந்த  நங்கவள்ளி போலீசார் மாணவியின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.