சென்னையில் பட்டப்பகலில் பெற்றோர் இருக்கும் போதே மாணவியை வீடு புகுந்து மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உடற்கல்வி ஆசிரியரை நைய புடைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், பெரியார் நகர், நேரு தெருவை சேர்ந்தவர் ராஜேஷ் (26). இவர், திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக உள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த பள்ளியில் பிளஸ் 2 படித்துவரும் முத்தாபுதுப்பேட்டையை சேர்ந்த 17 வயது மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷ் நெருக்கமாக பழகியுள்ளார். திடீரென மாணவியை மிரட்டி, சினிமா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்து தனிமையில் அழைத்து சென்றுள்ளார். 

இந்நிலையில், ராஜேஷ், மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்துள்ளார். அதற்கு மாணவி, ‘அம்மா, அப்பா வீட்டில் இருப்பதால் வெளியே வரமுடியாது’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து,  மாணவியின் வீட்டின் அருகே சென்ற ஆசிரியர், ‘’மாடி வீட்டின் சாவியை எடுத்துக்கொண்டு படிக்கட்டு வழியாக வந்துவிடு, நான் வருகிறேன்’ என்று கூறி மிரட்டியதாக தெரிகிறது.

இதனால் பயந்துபோன பள்ளி மாணவி, மாடியில் உள்ள அறைக்கு சென்றுள்ளார். இவரை பின்தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு தெரியாமல் மாடிக்கு சென்ற ராஜேஷ், அங்கு மாணவியுடன் கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மாடிக்கு சென்ற மகள் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் மேலே சென்றுள்ளனர். 

பின்னர் அறையின் கதவை தட்டியதும் மாணவி பதற்றத்துடன் வெளியே வந்துள்ளார். உள்ளே ராஜேஷ் அரைகுறை ஆடையுடன் நின்றிருந்ததால் மாணவியின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, ஊர் மக்கள் திரண்டு வந்து உடற்கல்வி ஆசிரியர் ராஜேஷை சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.