நெல்லையில் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக 2 இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் வினிஸ்டன். இவரது மனைவி வினிதா. இவர்களுக்கு 5 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 7 குழந்தைகள் உள்ளது. அவர்களது 4-வது குழந்தை இளவரசி (12). இந்த மாணவி நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.  இந்நிலையில், வழக்கம் போல இளவரசி பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினார். இதனையடுத்து, வெளியில் விளையாட சென்ற பள்ளி மாணவி திடீரென மாயமானார்.

இதையடுத்து சிறுமியை பெற்றோர்  பல இடங்களில் தேடினர். ஆனால் அவள் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்று எந்த தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்தனர். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, வினிஸ்டனின் வீட்டிற்கு அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் அருகில் சிறுமி இளவரசி அரை நிர்வாண கோலத்தில் பிணமாக கிடப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். 

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமி உடலில் நகக்கீறல்கள் மற்றும் ரத்த காயங்களுடன் அரை நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததால் அவளை யாரோ பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக 2 இளைஞர்களை சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியை பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.