காதலனுடன் வந்த இளம் பெண்ணை ஆபாசமாக போட்டோ எடுத்து மிரட்டி, தங்க நகைகளைப் பறித்த ரவுடி வெங்கடேசனை  போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

சேலத்தை அடுத்த வீராணம் அருகே உள்ள தைலானூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கடந்த மார்ச் 22ம் தேதியன்று, கொண்டலாம்பட்டி அருகே பட்டபிளை மேம்பாலத்தின் அடியில் காதலனுடன் வந்த இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டார். மேலும் அவரை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தார். அவர் அணிந்திருந்த பிரேஸ்லெட்டையும் பறித்துக்கொண்டார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த கொண்டலாம்பட்டி காவல்துறையினர் வெங்கடேசனை தேடி வந்தனர். கடந்த ஏப்ரல் 7ம் தேதி, சிவதாபுரத்தில் குமார் என்பவரிடம் வீச்சரிவாளைக் காட்டி அவரிடம் இருந்து 950 ரூபாய் மற்றும் வெள்ளி செயினை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார். அவரை அன்று மாலையிலேயே கொண்டலாம்பட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் விசாரணையின்போது, கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி, தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொண்டு  மூதாட்டி ஒருவரிடம் 9 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்ட சம்பவத்திலும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுபோன்ற தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த வெங்கடேசனை  கடந்த 2016ம் ஆண்டு, காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த பிறகும் வழிப்பறி குற்றங்களில் ஈடுபட்டு வந்ததால், அவரை மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கொண்டலாம்பட்டி ஆய்வாளர் , மாநகர துணை ஆணையர் ஆகியோர் பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து சேலம் மாநகர காவல் ஆணையர் சங்கர், ரவுடி வெங்கடேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.