சேலத்தில் சினிமா பாணியில் கார்களை விரட்டி சென்று நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் செல்லத்துரை என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் சுந்தரர் தெருவை சேர்ந்தவர் செல்லதுரை (37). இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அரிசி கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் சமீபத்தில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தார். வரும் சட்டமன்ற தேர்தலலில் போட்டியிடவும் திட்டமிட்டிருந்தார். இவர் மீது ஒரு கொடிலை, 3 கொலை முயற்சி, ரேசன் அரிசி கடத்தல் உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. தொடர்ச்சியாக குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் செல்லத்துறை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த குண்டர் சட்டம் செல்லாது என வழக்கு தொடர்ந்த செல்லதுரை 15 நாட்களுக்கு முன்புதான் சிறையில் இருந்து வெளியே வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு அம்மாபேட்டையில் உள்ள தனது வழக்கறிஞரை பார்க்க செல்லதுரை காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த இரு கார்களில் வந்த மர்ம கும்பல் ஒன்று சினிமா பாணியில் விரட்டியது. இதனையடுத்து, கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனி பகுதியில் எதிரே வந்த கார் செல்லதுரையின் கார்மீது மோதியது. அதேநேரத்தில் மற்றொரு கார் பின்புறம் வந்து மோதி நின்றது. அந்த கார்களில் இருந்து இறங்கிய கும்பல் செல்லதுரையை பல்வேறு இடங்களில் சராமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர்,  பின்புறம் இருந்த காரில் அந்த கும்பல் தப்பித்து சென்றது. 

இந்த கொலை தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் செல்லதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரேசன் அரிசி முன்பகை காரணமாக ஜான்சன் என்பவர் கூலிப்படையினர் மூலம் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.