கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதத்தில் அந்த பெண்ணின் கணவர், கள்ளக்காதலனை வெட்டி வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர், பெரியபட்டு ஏரியில் ஒரு 35 வயது மதிக்கத்தக்க ஆணின் பிணம் கண்டறியப்பட்டுள்ளது. அவரின் உடலில் வெட்டு காயங்கள் கழுத்தில் ஆழாமான வெட்டு காயங்கள் இருப்பதால் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடர்ந்தனர்.

இந்நிலையில் பண்ருட்டி அருகே உள்ள எல்.என். புரம் பகுதியை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் காணமல் போனதாக அவரது மனைவி அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சதாம் உசேனின் அடையாளம் இறந்தவரின் உடலுடன் ஒத்துப்போக போலீசார் தீவர விசாரணையை தொடர்ந்தனர். சதாம் உசேன், எல்.என்.புரம் பள்ளிவாசலில் ஹஜ்ரத்தாக இருந்துள்ளார்.

அவரது செல்போன் எண்ணை வைத்து ஆராய்ந்ததில் அன்சாரி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்தன. அதனடிப்படையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த அன்சாரி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகம் வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகவே, அன்சாரியின் மனைவி எல்.என்.புரம் பள்ளிவாசலில் மந்திரிக்கச் சென்றுள்ளார்.

அடிக்கடி சென்றதால் சதாம்உசேனுக்கும், அன்சாரி மனைவிக்கும் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறி சுமார் 5 ஆண்டுகள் உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களது பழக்கம் அன்சாரிக்கு தெரியவந்து ஆத்திரமடைந்து மனைவியை கண்டித்துள்ளார். அவர் கேட்பதாக இல்லை. தொடர்ந்து போனில் பேசி வந்துள்ளனர்.

இதனால் அன்சாரி சதாம்உசேனை கொலை செய்ய ஒரு வாரமாக முயற்சித்துள்ளார். எதுவும் பலனளிக்கவில்லை. அதன்பிறகு , எலவனாசூர் கோட்டையில் உள்ள ஒருவருக்கு மந்திரிக்க வேண்டும் என பொய் சொல்லி அன்சாரி சதாம்உசேனை அழைத்து சென்றுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற போது திருநாவலூர் பெரியபட்டு ஏரி அருகே வந்த போது சதாமுசேனை வண்டியை விட்டு கிழே இறங்க சொல்லி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டு, அங்கிருந்த ஏரியில் தூக்கி வீசிவிட்டு தப்பித்துள்ளார்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட அன்சாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு துணையாக இருந்த 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.