வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் கைது.. மன்னிப்பு கேட்கும் வீடியோவை வெளியிட்ட தமிழ்நாடு போலீஸ்!
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என கூறி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
தமிழ் மக்களால் தாக்கப்படுவது போலவும், வேலை செய்யும் இடத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வது போலவும் போலியான வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய மனோஜ் யாதவ் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் மன்னிப்பு கேட்கும் வீடியோவை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.
பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதை போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என கூறி சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் வீடியோ போலியானது என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
விசாரணைக்காக சென்ற தமிழக காவலர்களை ராஜஸ்தான் காவலர்களிடம் சிக்க வைத்த பலே கொள்ளையர்கள்
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 நாட்களாக பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஐஏஎஸ் குழுவினர் திருப்பூர், கோவை, சென்னை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று சமூக வலைதளங்களில் பரப்பியவர் குறித்து விசாரணை நடத்தி போலீசார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த புத்தேரியில் கடந்தத 6 மாதங்களாக வேலை பார்த்து வந்த மனோஜ் யாதவ் (43) சில வீடியோக்களை சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட காரணத்தால் மறைமலைநகர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்நிலையில், தமிழ் மக்களால் தாக்கப்படுவது போலவும், வேலை செய்யும் இடத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வது போலவும் போலியான வீடியோ வெளியிட்ட மனோஜ் யாதவ் மன்னிப்பு கேட்கும் வீடியோவை தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ளது.