குழந்தை பாக்கியம் பெறுவதற்கு, பரிகார பூஜை செய்வதாக கூறி, ரூ.7 லட்சம் மோசடி செய்த பாதிரியாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சென்னை ஐயப்பன்தாங்கல் காமாட்சி நகரை சேர்ந்தவர் ஆனந்த் (40), தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஷர்மிளா (34). பல ஆண்டுகளுக்கு முன் திருமணமான இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால், பல்வேறு கோயில்களுக்கு சென்று, பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில் தேவாலயம் நடத்தும் ஜெயக்குமார் (40) என்ற பாதிரியாரை, ஆனந்த் சந்தித்தார். அப்போது அவர், பிரார்த்தனை செய்து வழிபாடு நடத்தினால், ஷர்மிளாவுக்கு குழந்தை பிறக்கும்' என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அவரிடம், இருவரும் சென்று பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும், குழந்தை பெறுவதற்கான பரிகார பூஜைகள் தொடர்பாக ஷர்மிளாவிடம் சிறுக, சிறுக ரூ.7 லட்சம் வரை பாதிரியார் ஜெயகுமார் வாங்கியுள்ளார். இதன்பிறகும் குழந்தை பாக்கியம் இல்லை. ஏமாற்றமடைந்த ஷர்மிளா, ஜெயக்குமாரிடம் பணத்தை திருப்பி கேட்டும், பாதிரியார் தராமல் அலைக்கழித்துள்ளார். புகாரின்படி, பூந்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில்,பாதிரியார் ஜெயக்குமார், குழந்தை பாக்கியத்துக்காக பரிகார பூஜை செய்வதாக நாடகமாடி ரூ-7 லட்சம் மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.