உத்தரப்பிரதேச மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடி விகாஷ் துபே கைது செய்யப்பட்டுள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ரவுடிகளின் அராஜகம் அதிகரித்த நிலையில் குற்றவாளிகளைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, கான்பூரில் ரவுடி கும்பல் ஒன்றைச் சுற்றி வளைத்தபோது போலீசார் மீது ரவுடி கும்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 8 போலீசார் உயிரிழந்தனர். 5 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ள இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியான விகாஷ் துபேவை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர்.

இந்நிலையில் ரவுடி விகாஷ் துபே மத்திய பிரதேசத்தில் இன்று கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தின் உஜ்ஜயினி கோயிலுக்குச் சென்ற விகாஷ் துபேவை அங்குள்ள பாதுகாவலர்கள் அடையாளம் கண்டுபிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின்பு விகாஷ் துபேவை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இது குறித்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச அமைச்சர், இது போலீசாரின் மிகப் பெரிய வெற்றி. விகாஷ் துபே கொடூர கொலையாளி. நாங்கள் போலீசாரை உஷார்படுத்தி இருந்தோம். இது தொடர்பாக உபி போலீசாருக்கு பின்பு தகவல் அளித்தோம் என தெரிவித்துள்ளார். கொடோரன் விகாஷ் துபேயை தூக்கில் போட வேண்டும் என அவரது தாயார் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.