பாஜகவில் இணைந்த கூலிப்படைத் தலைவன் படப்பை குணா மனைவி.. அடுத்த நாளே ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்.!
ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வரும், குணாவின் மனைவி எல்லம்மாள் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார்.
2 நாட்களுக்கு முன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜக இணைந்த பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மதுரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் பிரபல ரவுடி படப்பை குணா. இவர் மீது ஆள் கடத்தல், கொலை, கொலை முயற்சி என 24 வழக்குகள் நிலுவையில் உள்ளது. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களை மிரட்டி மாமுல் வாங்கி வருவதாகவும், கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு உள்ளிட்டவை செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில், ரவுடிகளை ஒடுக்குவதற்காக சென்னை புறநகர் மாவட்டங்களாக உள்ளாகும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரியாக கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ரவுடிகளை ஒதுக்குவதற்கு சிறப்பு தனிப்படைகளை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சுங்குவார்சத்திரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் ரவுடி மற்றும் கட்டபஞ்சாயத்து வேலையில் ஈடுபடும் படப்பை குணா என்பவரை கைது செய்வதற்கு காவல்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த படப்பை குணா திடீரென தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்ய பல்வேறு முயற்சிகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, அவருக்கு உதவிய போலீஸ், படப்பை குணாவிற்கு வலது கரமாக செயல்பட்டு வந்த போந்தூர் சிவா என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதே வழக்கில் போந்தூர் சேட்டு என்பவரையும் தற்போது தேடி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வரும், குணாவின் மனைவி எல்லம்மாள் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில், பிரபல ரவுடி படப்பை குணாவின் மனைவி எல்லம்மாள் உட்பட 6 பேரை சுங்குவார்த்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த 6 பேரிடமும் படப்பை குணா எங்கே தலைமறைவாக இருக்கிறார்? என்பது உள்ளிட்ட விவரங்களுக்காக ரகசிய இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.