பல்வேறு மாதங்களாக நீராவி முருகனை தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
நாங்குநேரி அடுத்த களக்காடு பகுதியில் பிரபல ரவுடி நீராவி முருகன் போலீசாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆலடி அருணா கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (48). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. குறிப்பாக திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை செய்யப்பட்ட வழக்கில் நீராவி முருகன் குற்றவாளியாக இருந்தார்.

தீவிர தேடுத் வேட்டை
இந்நிலையில், ஒட்டஞ்சத்திரம் அருகே அண்மையில் நடந்த ஒரு கொலை வழக்கில் நீராவி முருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால், அவரை கைது செய்ய தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். மேலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரில் 40 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாகவும் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.

நீராவி முருகன் என்கவுன்டர்
இந்நிலையில், பல்வேறு மாதங்களாக நீராவி முருகனை தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை தலைமையிலான தனிப்படையினர் இன்று நெல்லை வந்துள்ளனர். நாங்குநேரிக்கு அவர்கள் சென்றபோது நீராவி முருகன் அங்கிருந்து களக்காடு சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. அவரை மடக்கிப் பிடிக்க முயன்றபோது போலீசாரை அரிவாளைக் கொண்டு வெட்டியுள்ளார். மூன்று காவலர்களுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். என்கவுன்டர் செய்யப்பட்டதில் உயிரிழந்த அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
