தஞ்சை மாவட்டம் கூத்தங்குளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுளுக்கி என்கிற மணிகண்டன். இவரது மனைவி ராஜலட்சுமி. இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஊரில் இருக்கும் அய்யனார் கிராமத்தில் கடந்த ஆண்டு கொடை விழா நடைபெற்றது. அப்போது கிடா வெட்டும் நிகழ்ச்சியில் தகராறு ஏற்பட்டு அடிதடி நடந்துள்ளது. இதில் மணிகண்டன் மீது வழக்கு பதியப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருந்திருக்கின்றன.

இதனிடையே மணிகண்டனுக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியதையடுத்து சிறையில் இருந்து வெளிவந்தார். தன் வீட்டில் தங்கியிருந்த அவர் நேற்று காலையில் அங்கிருக்கும் பண்ணைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மர்ம நபர்கள் சிலர் அங்கு வந்தனர். அவர்கள் கைகளில் கத்தி, அருவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தனர். மணிகண்டனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள் திடீரென அவரை தாக்க தொடங்கினர். மர்ம கும்பலிடம் இருந்து தப்பி ஓடிய மணிகண்டனை விடாமல் துரத்திச் சென்று வெட்டினர். 

இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். கொலை வழக்கு பதிந்த காவலர்கள் தப்பியோடிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.