சென்னை பெரம்பூர் அடுத்த புளியந்தோப்பில் மனைவி கண் எதிரேயே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பெரவள்ளூர் அருகே அகரம் கோவிந்தராஜுலு தெருவை சேர்ந்தவர் அப்பு (எ) தினேஷ் (28). பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. கடந்த ஆண்டு குண்டர் சட்டத்தில் சிறைக்கு சென்று, கடந்த 2 நாட்களுக்கு முன் வெளியே வந்தார்.

  

இந்நிலையில் தினேஷ், நேற்று இரவு தனது மனைவி, குழந்தையுடன் பைக்கில் கடைக்கு சென்றார். ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் சென்றபோது, 3 பைக்கில் வந்த 6 பேர், அவரை மறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு உடனே தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

அப்புவுக்கும், அகரம், பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கதிரவனுக்கும், மோதல் இருந்தது. நேற்று மாலை, 6:00 மணி அளவில், கதிரவன் கோஷ்டியினர், ஐ.சி.எப்.,பேருந்து நிலையம் அருகே, கொலை திட்டத்துடன் காத்திருந்தனர் .தினேஷ் அந்த பகுதியை கடந்து சென்ற போது, அவர்கள், பின் தொடர்ந்து கொலை செய்தது, விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை தொடர்பாக  6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதீஷ்குமார், சசிக்குமார், கதிர், கோகுல், சரவணன், மற்றும் மோஷிஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.