சென்னையில் பிரபல ரவுடியின் மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் யார் பெரிய ரவுடி என்ற தகராறில் தினேஷ் கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்துள்ளனர். 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகர் அம்மணிஅம்மன் தோட்டம் 4-வது தெருவை சேர்ந்தவர் பிரபல ரவுடி ஒத்தவாடை பிரகாஷ். இவருடைய மகன் தினேஷ் (24). ரவுடியான இவர் மீது கஞ்சா விற்பனை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அம்மணியம்மன் தோட்டம் பகுதியில் தினேஷ் நடந்து சென்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர், அவரை வழிமறித்து ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

இந்நிலையில் நேற்று இரவு புதுவண்ணாரப்பேட்டை லட்சுமி அம்மன் கோவில் தெருவில் பதுங்கி இருந்த மாங்கா சதீஷ் (26), செல்வம் (23), சந்தோஷ்(19), அரி (19), பிரவீன் (20), மகேஷ் (19) ஆகிய 6 பேரை கைது செய்தனர். விசாரணையில் கொலையான தினேசுக்கும், கைதான மாங்கா சதீசுக்கும் யார் பெரிய ரவுடி? என போட்டி இருந்து உள்ளது. இதனால் தினேஷ், மாங்கா சதீசை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகவும், இதை அறிந்த மாங்கா சதீஷ் முந்திக்கொண்டு தினேஷை கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.