Madurai Encounter | நள்ளிரவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி… குருவி விஜயை சுட்டுப்பிடித்த போலீஸ்..
நள்ளிரவில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அங்கு விரைந்தபோது ரவுடிக் கும்பல் அவர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்தது.
நள்ளிரவில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் அங்கு விரைந்தபோது ரவுடிக் கும்பல் அவர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்தது.
தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றதும், ரவுடிகள் வேட்டை தொடங்கியுள்ளது. அதிலும் கோவை என்கவுண்டர் புகழ் சைலேந்திரபாபு காவல் துறை தலைவராக பொறுப்பேற்றதால் ரவுடிகளை சுட்டுக் கொல்வதும், துப்பாக்கிச்சூடு நடத்தி ரவுடிகளை கைது செய்யும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.
மதுரை அண்ணாநகரில் சென்பகத்தோட்டம் மீனவ சங்க கட்டடம் அருகே நள்ளிரவில் பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நிகழ்விடத்திற்கு விரைந்த போலீஸார் ஒரு கும்பல் நள்ளிரவில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்ததை கண்டுபிடித்தனர். போலீஸைக் கண்டதும் அந்தக் கும்பல் தப்பிக்க முயற்சித்தது. ரவுடிக் கும்பலை போலீஸார் விடாமல் துரத்தியாதல் அப்பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பரபரப்பு நிலவியது. அப்போது போலீஸாரை ரவுடிக் கும்பல் கட்டையாளும், கற்கலாலும் தப்பிக்க முயற்சித்தனர்.
ரவுடிக்கும்பலை விரட்டிச் சென்ற போலீஸார் ஒரு கட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் குருவி விஜய் என்ற ரவுடியின் காலில் குண்டு பாய்ந்து அவன் சரிந்து விழுந்தான். இதையடுத்து ஒட்டுமொத்த ரவுடி கும்பலையும் போலீஸார் அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு பிடித்துச் சென்று விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியால் சுடப்பட்ட ரவுடி குருவி விஜய்-க்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குருவி விஜய் மீது பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. பாலியல் பலாத்கார முயற்சிக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணிடமும் போலீஸார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் ஸ்ரீபெரும்புதூர் அருகே வடமாநிலக் கும்பல் ஒன்று பெண்ணிடம் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி நகையை பறித்துவிட்டு காட்டுக்குள் சென்று தலைமறைவானது. உடனடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை போலீஸார் தேடி வந்தனர். கையில் துப்பாக்கியுடன் காட்டுக்குள் பதுங்கிய கும்பலை தீவிரமாக தேடிய போலீசார் ஒரு கட்டத்தில் ஒரு கொள்ளையனை சுட்டுக்கொன்றனர். மேலும் இருவரை கைது செய்தனர்.
ஸ்ரீபெரும்புதூர் என்கவுண்டர் நடந்த அடுத்த சில நாட்களிலேயே தூத்துக்குடியில் ஒரு என்கவுண்டர் நடத்தப்பட்டது. புதுக்கோட்டையை சேர்ந்த துரைமுருகன் என்ற பிரபல ரவுடியை நெல்லையில் நடைபெற்ற ஒரு கொலை தொடர்பாக போலீஸார் தேடி வந்தனர். இந்தநிலையில் கடந்த மாதம் 15ம் தேதி, தூத்துக்குடியில் உள்ள முத்தையாபுரம் கோவளம் கடற்கரையில் துரைமுருகன் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று துரைமுருகனை, சுற்றிவளைத்தபோது அவன் போலீஸாரை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பிக்க முயற்சித்தான். இதையடுத்து ரவுடி துரைமுருகனை போலீஸார் சுட்டுக்கொன்றனர்.
தமிழ்நாடு காவல் துறை தலைவராக இருக்கும் சைலேந்திரபாபு, கடந்த 2010-ல் கோவை மாநகரக கமிஷ்னராக பணியாற்றினார். அப்போது அக்கா, தம்பி என இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான். அச்சம்பவத்தில் சைலேந்திர பாபுவை அனைவரும் வெகுவாக பாராட்டினர். இந்தநிலையில் காவல் துறை தலைவராக சைலேந்திர பாபு பொறுப்பேற்ற பின்னர், ரவுடிகள் வேட்டையை தொடங்கியிருக்கிறார். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான ரவுடிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து துப்பாக்கி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். ரவுடிகள் கொட்டத்தை அடக்க என்கவுண்டர்களும் நடைபெறுகிறது. இவையனைத்தும் பொதுமக்களுக்கும் நிம்மதியை கொடுத்தாலும், என்கவுண்டர் செய்யப்படுவதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.