திண்டுக்கல் மாவட்டம் பழனியில், ஜாமீனில் வெளியே வந்த பிரபல ரவுடி தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார், 2 பேரை கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதியில் சாமி தியேட்டர் பகுதியை சேர்ந்தவர் அய்யாவு. பிரபல ரவுடி. இவர் மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்பட பல வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட அய்யாவு சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினார். அடித்த சரக்கு மண்டைக்கு ஏறியதும், சாலையில் செல்வோர்களிடம் ரகளையில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவருடன் தகராறு செய்தார். அதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அந்த நேரத்தில் ஆறுமுகத்தின் நண்பர்கள் அவ்வழியாக வந்தனர். அங்கு ரவுடி அய்யாவு, தனது நண்பரை தாக்குவதை பார்த்த அவர்கள், அய்யாவுவை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி கீழே தள்ளினர். போதையில் கீழே விழுந்த அவரது தலையில் கல்லைப்போட்டு விட்டு, அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். 

இதுகுறித்து போலீசார் வக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், ரவுடிகளுக்குள் கோஷ்டி மோதல் ஏற்பட்டு, அய்யாவு கொலை செய்யப்பட்டாரா என சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், சம்பவ இடத்தில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ஆறுமுகம் மற்றும் அவரது நண்பர்கள் கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், ஆறுமுகம், அவரது நண்பர்கள் சூரியகுமார், எழில்புத்தன் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தப்பியோடிய ராம்குமார் என்பவரை தேடி வருகின்றனர்.